புல்மேல் பனித்துளி
விளையாடும் வேளை
கிளைமேல் சிட்டுக்குருவி
கவிபாடும் காலை
உன்மேல் நானிருந்தேன்
ஒலி கேட்டு விழித்தெழுந்தேன்
கண்ணாடியில் உன் உருவம்
கண்டு களித்தவள் நானல்லவோ
உன் முன்னாடி வந்து நின்று
முதன் முறை ரசிக்கின்றேன்.
நீ இப்புவி கண்ட நாள் முதல்
என் துணையுடன் நீயிருந்தாய்
ஆடினோம் பாடினோம்
ஒன்றாக விளையாடினோம்
எம்மைப்போல் ஒன்றாக வாழ்ந்த
மனிதரும் இப்புவியில் உண்டோ...
எங்கிருந்தோ வந்தான்
காதலெனும் வலை விரித்தான்
என்னுயிர் நீயென்றான்
என்னவளைத் தனதென்றான்
மனசு எனும் மூடன்
உன் மதிதனை மறைத்ததினால்
அவன் பொன்மொழியில் மயங்கினாய்
என்னையும் நீ மறந்தாய்
அவன் உடனிருந்த வேளையிலே..
திருமணமும் நடந்தது
இரு மனமும் சேர்ந்தது
ஈருடல் ஓருயிராய்
சீருடனும் சிறப்புடனும்
உறவுகள் போற்ற வாழ்ந்தாயே..
யார் கண்கள் பட்டதுவோ
உன் கனவுகள் சிதைந்ததுவே
உன் சொர்க்க வாழ்வுதனைக்
காணச் சகிக்காமல்
வந்துவிட்டான் காலனவன்
உன் கணவன் உயிர் கொண்டு
சென்றுவிட்டான் ஒரு விபத்துதனில்.
சிறகுடைந்த பறவையாய்
கிளையொடிந்த மரமாய்
களையிழந்து நீ நின்றாய்
தனிமரமாய் என்னுடனே.
அன்று முதல் இன்று வரை
நீ அழுதால் நான் அழுதேன்
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
உனக்கது தெரியவில்லை
என்னை நீ அறியவில்லை
துனைவன் உனைப் பிரிந்ததால்
எனை நீ பிரிவாய் என
நான் என்றும் நினைத்தேனோ?
நிழலாடிய நினைவுகளை
விழியிருந்து அகற்றினேன்
கண்ணாடியில் உன் பிம்பம்
தெரியவில்லை எனக்கு
தேடினேன் ஓடினேன் -ஐயகோ...
முடிந்துவிட்டது எல்லாம்
நின்றுவிட்டது உன் இதயம்
புதைத்துவிட்டனர் உன்னை
உள்ளே நீ வெளியே நான்..
இப்படிக்கு உன் ஆத்மா
No comments:
Post a Comment